செல்லாத உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுதா மிஸ்ரா என்பவர் தாக்கல் செய்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்தாண்டு டிசம்பர் 31–ந் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்வதில் சிக்கல்கள் இருந்ததாக யாராவது நிரூபித்தால், அவர்களுக்கு மீண்டும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக  மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், செல்லாத ரூபாய் நோட்டுகளை மீண்டும் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என நேரடியாக உத்தரவிட வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.

அதே நேரம் அந்த ரூபாய் நோட்டுகளை இன்னும் வைத்திருப்பவர்களின் உண்மை நிலை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இதுபற்றி பதில் அளிக்க மத்திய அரசுக்கு அவகாசம் தேவை என்றும் அவர்  கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அடுத்த 2 வாரங்களுக்குள் விரிவான பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.