இன்று மாண்புமிகு தமிழக பொறுப்பு ஆளுநர் அவர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்:

மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு,

முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தனித் தனியாக வழங்கியுள்ள கடிதங்களையடுத்து, தற்போதைய எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து, வரலாறு காணாத அரசியலமைப்பு சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற சூழ்நிலை ஒன்றின்போது, அப்போதைய கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா அவர்களை, கர்நாடக மாநில ஆளுநர் அவர்கள் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதங்களை கொடுத்த நாளிலேயே உத்தரவிட்டுள்ளார்.

மாண்புமிகு முதல்வர் அவர்களை பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏதாவது ஏற்படும் நிலையில், அரசியலமைப்புக்கு சட்டத்திற்கு விரோதமான அரசு தொடரவும், பேரவையின் நம்பிக்கையை பெறுவதில் நிலை நாட்டப்பட்டுள்ள ஜனநாயக மரபுகளை தகர்ப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாகவும் அமைந்து விடும். மேலும், தற்போது பதவியில் உள்ள முதல்வர் கடந்தமுறை பெரும்பான்மை நிரூபித்தபோது நடந்தது போலவே, குதிரை பேரம் போன்ற தீய செயல்களில் ஈடுபடும் சூழலுக்கு வழியேற்படுத்திவிடும்.

ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்கள் உத்தரவிட்டு, எஸ்.ஆர்.பொம்மாய் வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் புகழ்மிக்க தீர்ப்பில் சுட்டிக்காட்டிய அரசியலமைப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் கூறுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.