சாரண-சாரணியர் அமைப்புக்கு பா.ஜ.க தேசியத் தலைவர் ஹெச்.ராஜாவை தலைவராக்கும் தமிழக அரசு முயற்சிக்கு ஆளும்கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாரண- சாரணியர் இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைத் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளதோடு, ஹெச்.ராஜாவைப் பதவியில் அமர்த்த தேர்தல் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் முன்னாள் கல்வி இயக்குநர் மணிக்கு செங்கோட்டையன் தரப்பிலிருந்து மிரட்டல் வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்க திரைமறைவில் முயற்சி நடப்பதாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், சாரண- சாரணியர் அமைப்புக்கு பா.ஜ.க தேசியத் தலைவர் ஹெச்.ராஜாவை தலைவராக்கும் தமிழக அரசு முயற்சிக்கு ஆளும்கட்சியை சேர்ந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே செயல்பட்டு வரும் சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தமிழர் விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருபவருமான ஹெச்.ராஜாவை தலைவராக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக கல்வித்துறை அதிகாரிகள் மறைமுகமாக மிரட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

தமிழகம் சமூக நல்லிணக்கம், சமூக நீதி ஆகியவற்றின் தாயகமாக திகழ்ந்து வருகிறது. அதுவும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்தியில் சமத்துவ- சகோதரத்துவ எண்ணங்கள் அதிகமாக மேலோங்கியிருக்கும் மாநிலமாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட நல்லிணக்க உணர்வுகள் நிறைந்திருக்கும் தமிழகத்தில்,சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவை தலைவராக்க தமிழக அரசு முயற்சி செய்வது அதிர்ச்சியளிக்கிறது. பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் நாசகார செயலில் ஈடுபடுவது கடும் வேதனையளிக்கிறது. இதை ஏற்கவே முடியாது. வண்மையாக கண்டிக்கத்தக்கது.

இது போன்ற பொறுப்புகளுக்கு சகிப்புத்தன்மையும், பன்முக கலாசாரத்தை ஊக்குவிக்கும் பரந்தமனமும், தூரநோக்கு பார்வையும் கொண்ட பொதுவான ஒரு நபரையே கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இப்பொறுப்புக்கு ஹெச்.ராஜாவை கொண்டு வரும் முயற்சியை கைவிட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் முடிவுகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, சாரண- சாரணியர் அமைப்பு தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். சாரணர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டதால் போட்டியிடுகிறேன். என்னை போட்டியிடக்கூடாது என்று கூற ஸ்டாலினுக்கு தகுதியில்லை. வரும் 16-ம் தேதி நடைபெறும் சாரணர்- சாரணியர் அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவேன்” என்றார்.