லால்பேட்டை,டிசம்பர். 31
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள முத்தலாக் தடைச் சட்டத்தை கண்டித்து நகர ஜமாஅத்துல் உலமா சபை, முஸ்லிம் ஜமாஅத் மற்றும் தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகம் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் நேற்று 30 – 12 – 2017 சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜே. அப்துல் ஹமீத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அனைத்து பள்ளிவாசல்கள் முத்தவல்லிகள் மற்றும் முஸ்லிம் ஜமாஅத் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். புதுப்பள்ளிவாசல் இமாம் மௌலவி ஹாஃபிழ் அதாவுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.

முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் எஸ்.எச். அப்துல் ஸமத் வரவேற்புரையாற்ற, மௌலானா தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான் ஹள்ரத் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர்கள் மௌலானா எஸ்.ஏ. சைஃபுல்லாஹ் ஹள்ரத், மௌலானா எம். முஹம்மது காசிம் ஹள்ரத், ஜமாஅத்துல் உலமா சபையின் கடலூர் மாவட்ட செயலாளர் மௌலானா எஸ். முஹம்மது அலி ஹள்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழக அரசின் கடலூர் மாவட்ட காஜியும், ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வருமான மௌலானா ஏ. நூருல் அமீன் ஹள்ரத், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டு தலைவர் மௌலானா ஷைகுல் ஹதீஸ் ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான் ஹள்ரத், மௌலானா எம்.ஒய். முஹம்மது அன்சாரி ஹள்ரத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பேரெழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1:- தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைச் சட்டம் என்பது, அவசர கதியிலும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை கேட்காமலும், முஸ்லிம் வெறுப்பு அரசியலின் அடையாளமாகவும் எங்களால் பார்க்கப்படுகிறது. இச்சட்டத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு இச்சட்டத்தை உடனே கைவிட வேண்டும். இது போன்று சமூகத்தை பதற்றமாக்கும் முயற்சிகளை இனி மேற்கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 2:- ஆளும் மத்திய அரசு, தொடர்ந்து முஸ்லிம்களையும், சிறுபான்மையின சமூக மக்களையும், இதர அனைத்து மக்களையும் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தும் நிலையை தொடர்ந்து கையாண்டு வருகிறது. தேச மக்களின் வாழ்வுரிமையிலும், மத உரிமையிலும் தொடர்ந்து இடையூறு செய்யும் இந்த நிலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அரசு இது போன்ற செயல்களை இன்றோடு நிறுத்திக் கொண்டு தேசத்தின் வளர்ச்சி – நலன் ஆகியவற்றில் அக்கறை காட்ட வேண்டும் என எச்சரித்து கோரிக்கை வைத்து இக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 3:- முஸ்லிம் மக்கள், கணவன் – மனைவி மற்றும் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை காவல் நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்லாமல், தமது மஹல்லா ஜமாஅத் மற்றும் உலமாக்களை அணுகி பேசி சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மேற்காணும் தீர்மானங்களை முறையே, முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் எஸ்.எச். அப்துல் ஸமத், தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகத்தின் தலைவர் ஓ.எச். முஹம்மது மன்சூர், ஜமாஅத்துல் உலமா சபை நகர பொருளாளர் மௌலானா ஏ.கே. லியாகத் அலி ஹள்ரத் ஆகியோர் வாசித்தனர்.

கண்டனப் பொதுக்கூட்டத்தின் நிகழ்வுகளை தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகத்தின் செயலாளர் யூ. சல்மான் ஃபாரிஸ் தொகுத்து வழங்கினார். ஜமாஅத்துல் உலமா சபையின் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் மௌலானா ஏ.ஆர். ஸலாஹுத்தீன் ஹள்ரத் நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம் நிறைவுப் பெற்றது.

முத்தலாக் தடைச் சட்டத்தை கண்டித்து முதன்முதலாக நடைபெற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர்கள் – மாணவர்கள், உலமா பெருமக்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.

கண்டன பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர ஜமாஅத்துல் உலமா சபை, முஸ்லிம் ஜமாஅத் மற்றும் தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகம் ஆகியவற்றின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.