பாட்னா: முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் இந்த தேசத்தின் வேற்றுகிரகவாசிகள் என்று கூறியவர்தான் பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக ஆட்சி மன்றக் கூட்டத்தில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதாக அக்கட்சி நேற்று அறிவித்தது. இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஒருமித்த வேட்பாளராக திகழ்வார் என்பது பாஜகவின் கணக்காகும்.

ஆனால் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகளே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளோ மதசார்பற்ற வேட்பாளர் நிறுத்தப்பட்டால் மட்டுமே ஆதரிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன. ராம்நாத் கோவிந்தை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறித்து சில சர்ச்சை தகவல்களும் வெளியாகி வருகின்றன.

ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரை கடந்த 2009-ஆம் ஆண்டு அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும், மற்ற சிறுபான்மையின வகுப்பினருக்கு 5 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. மேலும் அனைத்து மதங்களிலும் உள்ள தலித்துகளுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற தகுதியை அளிப்பதற்கும் அந்த கமிட்டி ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

செய்தியாளர்கள் சந்திப்பு பாஜகவின் மூத்த தலைவராக வலம் வந்த ராம்நாத் கோவிந்த், இந்த பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் இந்த தேசத்தின் வேற்றுகிரகவாசிகள் என்று தெரிவித்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கருத்தை இவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பரிந்துரை முன்னாள் இந்திய தலைமை நீதிபதியும், தேசிய மதம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையின ஆணையத்தில் தலைவருமான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மற்றொரு பரிந்துரையையும் அளித்தார். அதாவது முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்த்துவிட்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்பதே அந்த பரிந்துரை.

அரசியலமைப்புக்கு எதிரானது அதற்கு ராம்நாத் கோவிந்தோ, முடியவே முடியாது, முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்ப்பது என்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றார். சீக்கிய தலித்துகள் மட்டும் இடஒதுக்கீடு சலுகையை அனுபவித்து வருகிறார்களே என்று கோவிந்திடம் கேட்டதற்கு இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் நாட்டின் வேற்றுகிரகவாசிகள் என்று தெரிவித்தார். மேலும் சமூக பொருளாதார நிலை மோசமாக உள்ள சிறுபான்மையின மக்களாக இருந்தாலும் வேலைவாய்ப்புகள், சட்டசபை அமைப்புகள், கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு சலுகை அளிக்கக் கூடாது என்று பாஜக விரும்புவதாகவும் அந்தக் கூட்டத்தில் கோவிந்த் தெரிவித்தார்.

வைரலாகும் இப்படி சமூக நீதிக்கு எதிராக, சிறுபான்மையினருக்கு எதிராக வன்மத்துடன் கருத்து தெரிவித்தவர்தான் ராம்நாத் கோவிந்த். இந்த ராம்நாத் கோவிந்தா நாட்டின் ஜனாதிபதியாவது? என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Thanks@ tamil.oneindia.com